கரோனா தொற்று பரவலை தடுக்க கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவால் விவசாயிகள், நெசவாளர்கள், கிராமிய கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், தெருக்கூத்து நடத்துபவர்கள், சினிமாத்துறை என பல்வேறு துறையினர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக தொழில், வியாபாரத்தை இழந்து சாலையோரம் கடை வைத்து பிழைப்பு நடத்தும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு பிரதம மந்திரி சாலையோர கடை ஆத்ம நிர்பார் நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இத்திட்டமானது, சாலையோரத்தில் கடை வைத்திருப்பவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் எளிதாக திருப்பி செலுத்தும் கடன் வழங்கும் திட்டம் ஆகும். இதில் சாலையோர வியாபாரிகளுக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய்வரை முதலீடாக வழங்கப்படும். இந்த கடன் தொகையை ஓராண்டுக்குள் மாத தவணையில் வங்கியில் செலுத்திட வேண்டும். அவ்வாறு சரியான நேரத்தில் செலுத்தும் வியாபாரிகளுக்கு அவர்கள் செலுத்திய 7 சதவீத வட்டி நேரடி பண பரிமாற்ற திட்டத்தின் கீழ் மீண்டும் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு திருப்பி அளிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் காய்கறி, பழங்கள் விற்பவர்கள், சாலையோரத்தில் சிற்றுண்டி கடை நடத்துபவர்கள், துணிக்கடை, செருப்புக்கடை, சலூன் கடை, செருப்பு தைப்பவர்கள் என பலரும் இத்திட்டத்தின் மூலம் கடன் உதவி பெறலாம்.
இத்திட்டம் குறித்து நாகை மாவட்ட வங்கியின் மேலாளர் சங்கரன் கூறுகையில், ”மாவட்டத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. நாகை, சீர்காழி, வேதாரண்யம், மயிலாடுதுறை உள்ளிட்ட நகராட்சிகள் மூலம் சாலையோர பதிவுசெய்யப்பட்ட சிறுதொழில் விற்பனையாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் விநியோகம் செய்து, அதனை மகளிர் திட்ட அலுவலர்கள் மூலம் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அவர்களுக்கு கடன் உதவி அளிக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நாகை மாவட்டத்தில் இதுவரை 31 ஆயிரத்து 294 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 22 ஆயிரத்து 438 சாலையோர வியாபாரிகளுக்கு 22 கோடியே 43 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடனாக அளிக்கப்பட்டு சுமார் 70 சதவீதம் சாலையோர வியாபாரிகள் இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற்று பயன் அடைந்துள்ளதாக கூறினார்.