மயிலாடுதுறை:கொத்ததெரு பகுதியை சேர்ந்த வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கண்ணன். புதன்கிழமை இரவு புதிய பேருந்து நிலையம் அருகில் முன்விரோதம் காரணமாக 20க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கதிரவன், சேது, ரஞ்சித், முருகவேல், கார்த்திக், துரைக்கண்ணு, குணசேகரன், பிரபாகரன், ஸ்ரீகாந்த், முருகவேல், அஜித், பிரித்திவிராஜ் மற்றும் 18 வயது நிரம்பாத சிறுவன் என 13 பேரை கைது செய்தனர். இவர்களில் 18 வயது பூர்த்தியடையாத சிறுவனைத் தவிர மீதமுள்ள 12 பேரை மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் 2 திருமதி கலைவாணி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மீதமுள்ள குற்றவாளிகளை தேடி வரும் காவல்துறையினர் 18 வயது நிரம்பாத சிறுவனை சீர்திருத்த பள்ளியில் அடைப்பதற்காக நீதிமன்றத்தில் தனியே ஆஜர்படுத்த உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய துரைக்கண்ணு மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் நகர செயலாளர் என்பதும், அவரது உடன் பிறந்த சகோதரரான பிரபாகரன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நகர செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிபதி முன்பு ஆஜர் படுத்துவதற்காக பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நீதிபதி குடியிருப்புகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. மேலும் வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கண்ணனை கொலை செய்துவிட்டு கொலையாளிகள் கத்தி, அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களை சாலையோரம் தூக்கி வீசிவிட்டு நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் சமுக வளைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:வன்னியர் சங்கப்பிரமுகர் கொலை... வன்னியர் சங்க மாநிலத்தலைவர் நேரில் சென்று ஆறுதல்