மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைய வாய்ந்த சட்டநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதம் 24ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில், யாகசாலை மண்டபம் அமைப்பதற்கான பணிகள் நேற்று (ஏப்.16)தொடங்கியது.
இதற்காக கோயிலின் மேற்கு கோபுர வாயில் அருகே நந்தவனத்தின் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டியபோது மண்ணில் புதைந்திருந்த விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சோமஸ்கந்தர், அம்பாள், பூர்ண புஷ்கலா அய்யனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 22 ஐம்பொன் சிலைகளும், 55 பீடங்களும், பூஜை பொருட்கள் மற்றும் சீர்காழியில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பதிகம் தாங்கிய 462 தேவார செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டன.
இவற்றை தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரம்மாசாரியர் நேரில் பார்வையிட்டு, அவைகள் எந்த காலத்துக்குரிய சிலைகள் எனக் கேட்டறிந்தார். இதுவரையில் இதுபோன்று, எங்கும் கிடைக்காத வகையில் ஒரே இடத்தில் 22 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டது சீர்காழி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இவை 700 ஆண்டுகள் முற்பட்டதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, ’மண்ணுக்கு கீழே கிடைக்கும் அனைத்து பொருட்களும் அரசிற்கு சொந்தமானது என்ற நிலை உள்ளது. எனவே, மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகள், பூஜை பொருட்களை அரசின் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கிறோம். தொல்லியல் துறை அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின்னர், மீண்டும் அவை கோயிலில் ஒப்படைக்கப்படும்’ எனவும் தெரிவித்தனர்.