தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகூர் தர்கா கந்தூரி; ஆட்டோவில் எண்ட்ரி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்! - A R Rahman entry in auto

Ganduri festival: நாகூர் தர்காவில் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

AR Rahman arrives in auto at Nagore Dargah for Ganduri festival
கந்தூரி விழாவிற்காக நாகூர் தர்காவிற்கு ஆட்டோவில் ஏ.ஆர்.ரஹ்மான் வருகை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 12:29 PM IST

கந்தூரி விழாவிற்காக நாகூர் தர்காவிற்கு ஆட்டோவில் ஏ ஆர் ரஹ்மான் வருகை

நாகப்பட்டினம்:உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 467ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று (டிச.24) அதிகாலை நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம், ஒவ்வொரு ஆண்டும் உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 467ஆம் ஆண்டு கந்தூரிவிழா, கடந்த டிசம்பர் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம், நேற்றிரவு (டிச.23) நாகப்பட்டினத்தில் இருந்து துவங்கியது. ஸ்தூபி இசை, தாரை தப்பட்டை என விடிய விடிய நடந்த சந்தனக்கூடு ஊர்வலமானது, அதிகாலை 4 மணிக்கு நாகூரை வந்தடைந்தது. கால்மாட்டு வாசலில் சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, நாகூர் ஆண்டவர் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்ஹா நிர்வாகிகளில் ஒருவரான கலீபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். முன்னதாக, வைபவ இடத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஆட்டோவில் வந்திறங்கினார். அதனைத் தொடர்ந்து, மயக்க நிலையை அடைந்த சந்தனம் பூசிய கலீபா மஸ்தான் சாஹிப், பக்தர்கள் கூட்டத்தில் தூக்கி வரப்பட்ட நிலையில், சுற்றியிருந்த பக்தர்கள் அவரைத் தொட்டு வணங்கினர்.

பின்னர், நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசப்பட்ட சந்தனம் அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த நாகூர் கந்தூரி விழா, வருகிற 27ஆம் தேதி கொடி இறக்கப்பட்டு நிறைவு பெறும்.

இதையும் படிங்க:நாகூர் தர்காவின் 467ஆம் ஆண்டு கந்தூரி விழா; கோலாகலமாக நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலம்!

ABOUT THE AUTHOR

...view details