மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாட்டின் இயற்கை வளம், கனிமவளப் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மாநாடு: இயற்கை வளங்களைக் காக்க 18 தீர்மானங்கள்! - மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன்
நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் இன்று நடைபெற்ற மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மாநாட்டில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று, 18 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர்.
![மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மாநாடு: இயற்கை வளங்களைக் காக்க 18 தீர்மானங்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4172117-thumbnail-3x2-antimethane.jpg)
இது குறித்து பேராசிரியர் செயராமன் பேசுகையில், “மாநாட்டின் முடிவில் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என பிரகடனம் செய்யப்பட்டது. மேலும், காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் கூடி தீர்மானத்தை நிறைவேற்றி சட்டப்பேரவையில் சிறப்புச் சட்டம் இயற்றப்படவேண்டும். உலக நாடுகளின் ஏற்பளிப்பு மற்றும் நடைமுறைகளின்படி, தமிழ்நாட்டின் இயற்கை வள, கனிமவளங்கள் தமிழ்நாட்டிற்கே சொந்தம்.
அதை எடுப்பதையும், பாதுகாப்பதையும் மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டும். எண்ணெய் எரிவாயு எடுப்பதற்காக, நதிநீர் இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிடுகிறது. இதனால் ஆற்றுநீர் காசுக்கு விற்கப்படும் நிலை உருவாகி உள்ளது. மாநில உரிமையாகிய நதிகளை, மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டமாக, ஒற்றை தீர்ப்பாயத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்பது போன்ற 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன” என்று தெரிவித்தார்.
TAGGED:
held at mayiladuthurai