மயிலாடுதுறை: குத்தாலம் அருகே தேரிழந்தூரில் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளரின் தந்தையை குத்தாலம் காவல் ஆய்வாளர் அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து அவரது உடலை வாங்க மறுத்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர் சிவன் கோயில் வடக்கு வீதியைச் சேர்ந்த அர்ஜூணன்(60). இவர் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் சென்னை அடையாறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வருவது வழக்கம்.
அவமானப்படுத்திய காவலர்:இந்நிலையில், இவரது மூத்த மகன் ஜெயவசந்தனுக்கும் அதே பகுதியில் ஜவுளிக்கடை வைத்துள்ள மணிகண்டன் என்பவருக்கும் அடிதடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குத்தாலம் போலீசார் இரண்டு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தப் பிரச்சனை தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளரும், இவரது இளைய மகனான ஜெயசீலன், மணிகண்டன் கடையில் கள்ளநோட்டு வைத்துவிட்டுச் சென்றதாக புகாரின் பேரில் போலீசார் ஜெயசீலன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஜெயசீலனைப் பிடிப்பதற்காகச் சென்ற குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி, ஜெயசீலன் எங்கே..? என்று கேட்டு தந்தை அர்ஜுனணைத் தகாத வார்த்தையால் பேசி கையைப் பிடித்து இழுத்து அவமரியாதை செய்ததாகவும், இதனால் மன உளச்சலில் இருந்த ஜெயசீலனின் தந்தை அர்ஜுணன் பூச்சிமருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.