மயிலாடுதுறை மாவட்டம், விஜயா திரையரங்கம் பகுதியில், மயிலாடுதுறை வேட்பாளர் கோமல் ஆர்.கே.அன்பரசன், பூம்புகார் வேட்பாளர் எஸ்.செந்தமிழன், சீர்காழி வேட்பாளர் பொன்.பாலு ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "திமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாதபோதும் தங்கள் அராஜகத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. திமுகவுக்கு மக்கள் தவறி வாக்களித்துவிட்டால் மக்களின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்படும். மற்றொரு கூட்டணி பணமூட்டையை மட்டும் நம்பி தேர்தலில் போட்டியிடுகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேமுதிக, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, எஸ்டிபிஐ, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணியாக தேர்தலை சந்திகிறது.
இந்தத் தேர்தலில் திமுக வெல்லும் என்ற மாயையைப் போக்க அமமுகவுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அமமுக நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களை மட்டுமே தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. 1,000, 1,500 ரூபாய் என்று சொல்லி மக்களை ஏமாற்றவில்லை. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, சுயமாக தொழில் தொடங்க கடன் உதவி, ஐந்து பேர் கொண்ட பொறியியல் பட்டதாரி குழுவினருக்கு 25 லட்சம் ரூபாய் கடன் போன்ற திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
நிறைவேற்றக்கூடிய திட்டங்களையே அமமுக அறிவித்துள்ளது - டிடிவி தினகரன் பரப்புரை அமமுக ஆட்சி அமைந்தால் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். இஸ்லாமிய மக்களுக்கு மூன்று விழுக்காடு இட ஒதுக்கீட்டில் உள்ள குறைபாடுகள் களையப்படும், ரேஷன் பொருள்கள் வீடுகளுக்கே சென்று விநியோகிக்கப்படும். இதுபோன்ற 100 திட்டங்களை தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்.
திமுக போன்று வெளிமாநிலங்களில் உள்ளவர்களைக் கொண்டு நாங்கள் தேர்தல் அறிக்கை தயாரிக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களோடு உள்ளவர்களைக் கொண்டுதான் அமமுக கட்சி தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளது. மயிலாடுதுறை வேட்பாளர் கோமல் அன்பரசன் 20 ஆண்டுகாலமாக மாவட்டத்தின் வளர்ச்சிக்காக உழைப்பவர். அமமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரித்தவர்களில் அவர் முக்கியமானவர். அவரை மக்கள் அனைவரும் வெற்றிபெறச் செய்யவேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.