மயிலாடுதுறையில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு மயிலாடுதுறை:இந்திய அரசிலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை அம்பத்கரின் 67வது நினைவு நாளான இன்று, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன்படி மாயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பட்டவர்த்தி கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில், அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அரசுத் தரப்பில், மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா, டி.எஸ்.பி சஞ்சீவ் குமார் மற்றும் வருவாய் துறையினர் அம்பேத்கரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 40 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 20 பேர் கலந்து கொண்டு, மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இப்பகுதியில் 2021-இல் நடந்தது போல் கலவரங்கள் எதும் நடைபெற்று விடக்கூடாது என, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்ட ஏடிஎஸ்பி வேணுகோபால் தலைமையில் 220 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்னர்.
பட்டவர்த்தி மோதல் 2021:கடந்த 2021-ஆம் ஆண்டு அம்பேத்கரின் நினைவு தினத்தில், பட்டவர்த்தி கிராமத்தில் இரு தரப்பைச் சார்ந்த அரசியல் கட்சியினர் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தனர். அதில் ஒரு தரப்பினர், அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு அலங்கரிப்பு செய்து வைத்திருந்தனர்.
அப்பகுதியில் அம்பேத்கர் படம் வைப்பதால் சாதி மோதல் உருவாகும் என்று மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கட்டைகளால் வீசி தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காணப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
இதனை தொடர்ந்து 2022ஆம் ஆண்டு பட்டவர்த்தி கிராமத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நினைவு தின விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அரசுத் தரப்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் நினைவு தினம் அன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வருவாய்த்துறை சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் மீட்புப்பணி; ஹெலிகாப்டர் மூலம் உணவு.. பெட்ரோல் பங்க், ஏடிஎம் மையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்!