மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூரில் இந்து, இஸ்லாமிய சமுதாயத்தினர் ஒரே பகுதியில் வசித்துவருகின்றனர். இவ்வூரில் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை சாலை ஓரத்திலுள்ள இடுகாட்டில் புதைப்பது வழக்கம்.
இதற்காக, அப்பகுதியிலுள்ள பள்ளிவாசல் பின்புறமுள்ள பட்டா இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்மையில் இஸ்லாமியர் ஒருவரது உடல் அங்கு புதைக்கப்பட்டது. இதற்கு மாற்று மதத்தைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர்.
இது குறித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் தலைமையில் வரும் நவ.10ஆம் தேதி சமரச பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு (நவ.05) மங்கைநல்லூர் பகுதியைச் சேர்ந்த தாஜூதீன் மனைவி ரஷியா பேகம் (50) என்பவர் உயிரிழந்தார்.
அவரது உடலை பள்ளிவாசலில் வைத்து துவா செய்து பள்ளிவாசல் பின்புறமுள்ள காலி திடலில் அடக்கம் செய்ய இஸ்லாமியர்கள் ஏற்பாடு செய்தனர். இதற்கு மாற்று சமுதாயத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து மங்கநல்லூர் கடை வீதியிலுள்ள கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், இரு சமூகத்தினரிடையே கலவரம் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையிலான காவல் துறையினர், ரஷியா பேகத்தின் உடலைப் புதைப்பதற்காகத் தோண்டப்பட்டிருந்த குழியினை மூடினர்.
இதையடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் மகாராணி தலைமையிலான வருவாய்த் துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் முடிவில் தற்போதைக்கு இறந்த ரஷியா பேகத்தின் உடலை ஏற்கனவே உள்ள பழைய இடத்தில் புதைப்பது என்றும், தொடர்ந்து இப்பிரச்னையை கோட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி தீர்த்துக் கொள்வது என்றும் முடிவானது.
இதையும் படிங்க: திருமணத்திற்காக மதம் மாறுவதை தடுக்க சட்டம் இயற்றப்படும் - அமைச்சர்