தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏஐடியுசி மற்றும் சிஐடியு ஓஎன்ஜிசியின் வளர்ப்புப் பிள்ளைகளாக செயல்படுகின்றன - பேராசிரியர் த.ஜெயராமன் குற்றச்சாட்டு

ஏஐடியுசி மற்றும் சிஐடியு ஆகியன ஓஎன்ஜிசி நிறுவனத்தின் வளர்ப்புப் பிள்ளைகளாக செயல்படுகின்றன என மீத்தேன் திட்ட எதிர்ப்புகூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏஐடியுசி மற்றும் சிஐடியு ஓஎன்ஜிசியின் வளர்ப்புப் பிள்ளைகளாக செயல்படுகின்றன - பேராசிரியர் த.ஜெயராமன் குற்றச்சாட்டு
ஏஐடியுசி மற்றும் சிஐடியு ஓஎன்ஜிசியின் வளர்ப்புப் பிள்ளைகளாக செயல்படுகின்றன - பேராசிரியர் த.ஜெயராமன் குற்றச்சாட்டு

By

Published : Aug 24, 2022, 7:05 AM IST

மயிலாடுதுறை : மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் அதன் தோழமை அமைப்பு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் தெ.மகேஷ், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சபீக் அகமது, தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் சுப்பு.மகேசு, மே 17 இயக்கம் கோகுல், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த மாரி.பன்னீர்செல்வம், ரஞ்சித்குமார், சித்ரா ஜெயராமன் மற்றும் அபுசாலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் முடிவில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “சிபிஐ கட்சியின் தொழிற்சங்கமான ஏஐடியுசி, மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியு மற்றும் சில அமைப்புகள் ஒன்று சேர்ந்து, ஓஎன்ஜிசியை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு போஸ்டர் அடித்து ஒட்டியதோடு, ஓஎன்ஜிசி கிணறு அமைக்க அனுமதிக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் பேட்டி

ஓஎன்ஜிசியின் எண்ணெய், எரிவாயுத் திட்டங்களால் காவிரிப்படுகை முழுவதும் நிலம், நீர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மக்கள் உடல் நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டதால்தான், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் 2020 நடைமுறைக்கு வந்தது. புதிய கிணறுகள் அமைக்க அனுமதிக்கப்படாததால், ஓஎன்ஜிசி பழைய கிணறுகளிலேயே, மராமத்துப் பணி என்ற பெயரில் புதிய வேலைகளையும், கிணறுகளை ஆழப்படுத்துதல் ஆகிய பணிகளை செய்ததாலேயே மாவட்ட நிர்வாகம் அதனை தடுத்து நிறுத்தியுள்ளது.

சமூக அக்கறை இருந்திருந்தால் ஏஐடியுசி, சிஐடியு அமைப்புகள் ஓஎன்ஜிசியை வேலை செய்ய அனுமதிக்க கேட்டிருக்க மாட்டார்கள். அந்நிறுவனத்தில் 10,000 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிவதாக கூறியுள்ள அந்த அமைப்பினர், அவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்றுதான் கேட்டிருக்க வேண்டும்.

அதைவிடுத்து, ஓஎன்ஜிசியை செயல்பட அனுமதிக்க கோரியதற்கு காவிரிப்படுகை ஒட்டுமொத்தமாக அழியட்டும் என்றுதான் பொருள். எங்கெல்லாம் ஓஎன்ஜிசி வேலை செய்ததோ அங்கெல்லாம் நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் கலந்து, நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. கதிராமங்கலத்தில் நிலத்தடி நீரில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.7 மில்லிகிராம் கலந்துள்ளது.

0.5 மில்லிகிராம் மட்டுமே சகித்துக்கொள்ள முடியும். கச்சா எண்ணெய் கலந்துள்ள தண்ணீரை ஆடு, மாடுகளுக்குக் கூட கொடுக்க முடியாது. ஓஎன்ஜிசி செயல்படும் அடியக்கமங்கலம், கள்ளுக்குடி, கதிராமங்கலம் போன்ற கிராமங்களில் அதிகளவில் புற்றுநோய் பாதிப்பு காணப்படுகிறது.

ஓஎன்ஜிசியின் வளர்ப்புப் பிள்ளைகளாக செயல்படுகின்ற ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட அமைப்புகள் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடுபவர்கள் மீது ஆதாரமற்ற அவதூறு செய்கிறார்கள். காவிரிப்படுகையில் கோனகோபிலிப்ஸ் என்கிற அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் எவ்வளவு ஷேல்கேஸ், எண்ணெய் உள்ளது என ஓஎன்ஜிசி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

காவிரிப்படுகை பகுதியில் வசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி உள்ளிட்ட ஏஐடியுசி, சிஐடியு மற்றும் விவசாய அமைப்பினர் ஓஎன்ஜிசியை அனுமதிக்கக் கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளனர். இத்திட்டங்களால் நிலம், நீர் மாசுபட்டுள்ளது என்பது அவர்களுக்கு தெரியாதா?

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டப்படி காவிரிப்படுகையில் புதிய திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதை மாற்றி, பழைய திட்டங்களையும் ஒட்டுமொத்தமாக நிறுத்தினால்தான், காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாறும்” என கூறினார்.

இதையும் படிங்க:போர்வெல் தண்ணீரில் ஆயில்...ஓஎன்ஜிசி மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு...

ABOUT THE AUTHOR

...view details