உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியா முழுவதும் கடந்த 25 நாள்களாக தீவிரமாகப் பரவி வருகிறது. இரண்டாம் கட்ட பரவல் அபாயத்தை அடைந்திருக்கும் தமிழ்நாட்டில் அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை முழுமையான ஊரடங்கு தமிழ்நாடு அரசால் நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது.
சிவப்பு குறியீட்டுப் பகுதிகள் அதிகமாக அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டில் அதன் தாக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பரவுதலை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த முன்னெச்சரிக்கைப் பணிகளில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் முனைப்போடு செயலாற்றி வருகின்றன. காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை, பள்ளிக் கல்வி துறை என அனைத்துத் துறைகளும் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
பெருநகரங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என தமிழ்நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்ள பகுதிகள், சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கிருமி நாசினி தெளிப்பது, துப்புரவு செய்வது போன்ற முன்னெடுப்புகளில் தமது உயிரையும் பொருட்படுத்தாது தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் போரில் முன்னணி வீரர்களாக களத்தில் செயலாற்றிவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பிரிவினர் நன்றித் தெரிவித்து வருகின்றனர்.