நாகப்பட்டினம்:நாகை ஆரிய நாட்டு தெருவில் வசித்து வரும் மீனவர்களில் ஒரு பிரிவினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். நேற்று (ஏப்.6) நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆரியநாட்டு மீனவர்களில் வாக்கு சேகரிப்பதில் திமுக, அதிமுகவினரிடம் தகராறு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று(ஏப்.7) திமுகவில் இணைந்த மாரியப்பன், நகுலன், குகன், நித்தியன், நாகேந்திரன் ஆகிய 5 பேரை நாகை காடம்பாடி, ஏழைப்பிள்ளையார் கோயில் உள்ளிட்ட பகுதியில் வழி மறித்து அதிமுகவினர் அரிவாளால் தாக்கியுள்ளனர். அதில் படுகாயம் காயமடைந்த அவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்.
இந்த சூழலில் அவர்களை பார்க்க வந்த சக மீனவர்களை, நாகை அரசு மருத்துவமனை வளாகத்தில் அரிவாளுடன் அதிமுகவினர் நுழைந்து வெட்ட முயன்றுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவ குறித்து அறிந்து ஏடிஎஸ்பி சுகுமாரன், டிஎஸ்பி சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் அதிவிரைவு படை காவல்துறையினர் விரைந்து வந்தனர். தகராறில் ஈடுபட்டவர்கள் மீது வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஆரிய நாட்டுத்தெரு பகுதியைச் 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்த அதிமுகவினர் திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இதனையடுத்து நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அதிமுகவினர், அதிமுக முன்னாள் கவுன்சிலர் தர்மபாலன் தலைமையில், திமுகவில் இணைந்தவர்களை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி உள்ளனர். சிகிச்சை பெறுபவர்களை மருத்துவமனையில் கத்தியால் வெட்ட முயன்ற சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க:மின்னணு வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பு அறைக்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியர்!