மயிலாடுதுறை:தரங்கம்பாடி தாலுகா, பொறையாரில் தனியார் திருமண மண்டபத்தில் செம்பனார்கோவில் அதிமுக தெற்கு ஒன்றிய செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை அதிமுக மாவட்டச்செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்; 'தமிழ்நாட்டில் இளைஞர்கள் மிகமோசமாகப் பாதிக்கப்படும் அளவிற்கு கஞ்சா விற்பனை தாராளமாக கிடைப்பது வேதனையளிக்கிறது. தமிழ்நாடு அரசு, காவல் துறை இதனை முழுமூச்சாக செயல்பட்டு இதனைக்கட்டுப்படுத்த வேண்டும். கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களைக் கைது செய்ய வேண்டும், அவர்களது சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும். வாய்வார்த்தையாக சொல்லாமல் நிறைவேற்றிக்காட்ட வேண்டும்.
யூரியா தொடர்ந்து தட்டுப்பாடாக இருந்து வருகிறது. யூரியா தட்டுப்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேட்டால் நீலிகண்ணீர் வடிப்பதாக வேளாண்துறை அமைச்சர் கூறுகிறார். விவசாயிகளுக்குத் தேவையான அளவு யூரியாவை வாங்கி இருப்புவைக்கவில்லை. விவசாயிகளுக்குத் தேவையான உரங்களைத் தட்டுப்பாடு இன்றி கிடைக்க செய்ய வேண்டும்.