நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கோட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் அனைத்தும் சாய்ந்து, வயல்களில் தேங்கியுள்ள மழைநீரில் மூழ்கியுள்ளது.
ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் செலவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள், முற்றிய நிலையில் இருக்கும் பயிர்கள் அனைத்தும் வயலில் சாய்ந்து தண்ணீரில் மிதக்கிறது. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இது தொடர்பாக செறுதியூரைச் செர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் கூறுகையில் ”ஆண்டுதோறும் சம்பா சாகுபடி போது மழை வெள்ளத்தில் பாதிப்பு ஏற்பட்டு நஷ்டத்தை ஏற்படுத்தும். குறுவை சாகுபடியில் ஓரளவுக்கு லாபத்தைப் பார்க்கலாம் என்று பம்புசெட் மூலம் ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்தோம், பயிர்கள் நன்றாக விளைந்துள்ள நிலையில் ஒரு வாரமாக பெய்யும் மழையால் வயலில் பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மிதக்கிறது.