மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்குள்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயில் நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு உரிய, தீராத நோய்களைத் தீர்க்கும் தலமாக விளங்கிவருகிறது. இத்தகைய பிரசித்திப் பெற்ற கோயிலில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்குத் திருவிழா, 23 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது.
இதில் சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படியும், தமிழ்நாடு அரசின் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உள்பட்டும் கோயில் ஊழியர்கள் மட்டும் கலந்துகொண்டு, பக்தர்களின்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.
கட்டுப்பாடுகளுடன் நடந்த வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு முன்னதாக கடந்த 25ஆம் தேதி 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு முதல் கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய குடமுழுக்கு விழா இன்று எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்றது. தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோயிலுக்கு பக்தர்கள் வருவதைத் தடுக்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, வைத்தீஸ்வரன் கோயிலில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேலும், சுமார் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.