மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவு நாள்: மலர்வளையம் வைத்து அதிமுகவினர் அஞ்சலி! மயிலாடுதுறை: இந்தியாவில் மத்திய அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல் மொழி சட்டம் 1963 -ஐ அமல்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்த மாணவர் சாரங்கபாணி 1965 -இல் கல்லூரி வளாகத்திலேயே தன்மீது தீ வைத்துக் கொண்டு உயிர் நீத்தார்.
அவரது நினைவைப் போற்றும் வகையில், கல்லூரி வாயிலில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இன்று மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, மன்னம்பந்தலில் உள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதிமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் பங்கேற்று தியாகி சாரங்கபாணியின் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மொழிப்போர் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அதிமுகவினர் வீரவணக்கம் செலுத்தினர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதி, ராதாகிருஷ்ணன், ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: 2 இளைஞர்களுக்கு தலா 20 ஆண்டுகள் ஜெயில்!