மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிவேகமாக வாகனங்களில் செல்லக் கூடாது, படியில் தொங்கினால் நொடியில் மரணம், ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும், மதுபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது, போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்ட காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், மக்கள் கூடும் இடங்களில் பதாகைகளை வைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் வசித்து வந்த கார்த்திகேயன் என்பவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில், ரயில்வே மேம்பாலத்தின் வழியாக மயிலாடுதுறைக்குச் சென்றுள்ளார். பாலத்தில் ஏறும்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி கீழே விழுந்த அவர், எழ முடியாத வகையில் கால் வாகனத்தில் மாட்டிக் கொண்டுள்ளது.
அப்போது பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத லாரி, கார்த்திகேயன் மீது மோதியது. இதனால் லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி கார்த்திகேயன் உயிரிழந்தார். இதையடுத்து, லாரியுடன் தப்பி ஓடிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மென்பொருள் நிறுவனத்தின் தரவுகள் திருட்டு.. அதே நிறுவன ஊழியர்கள் 5 பேர் கைது - என்ன நடந்தது?
இதேபோல் மயிலாடுதுறையை அடுத்துள்ள மன்னம்பந்தல் குளத்தங்கரை தெருவைச் சேர்ந்த கலா (51) என்ற பெண், மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிர்புறம் உள்ள சாலையில் நடந்து, தனது மகள் வீட்டிற்குச் சென்றபோது, பின்னால் மெயின் ரோட்டில் இருந்து அதிவேகமாக வந்து திரும்பிய மாருதி சுசுகி மினிவேன், சாலை ஓரம் நடந்து சென்ற கலா மீது மோதி, பின் வேப்பமரத்தின் மீது மோதி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்புறம் பாலகிருஷ்ணன் என்பவரின் ரெடிமேட் காம்பவுன்ட் சுவற்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கலா, செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் சேதமடைந்த காம்பவுன்ட் அருகே எப்போதும் கட்டப்பட்டிருக்கும் மாடுகளை, அன்று உரிமையாளர் அவிழ்த்துச் சென்று கொட்டகையில் கட்டியதால் கால்நடைகள் உயிர்தப்பின.
இந்த விபத்து குறித்த விசாரணையில், மினிவேனை ஒட்டி வந்த கார்த்திகேயன் வாகன உரிமம் இல்லாமல் கார் ஓட்டி பழகியதும், மெயின் ரோட்டில் இருந்து வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. மேலும், பிரேக்கைப் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால், கலா மீது மோதி எதிர்புறம் இருந்த காம்பவுன்ட் சுவற்றின் மீது மோதியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவரது உடல்களை கைப்பற்றி மயிலாடுதுறை போலீசார் மயிலாடுதுறை உடற்கூறு ஆய்வுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் காலையில் மகனை பள்ளியில் விட்டுவிட்டு ஸ்கூட்டியில் ஹெல்மெட் வைத்திருந்தும், ஹெல்மெட்டை அணியாமல் சென்ற சோழம்பேட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண், அதிவேகமாக வந்த லாரி மோதியதில் பின்சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து போலீசார், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களால் விபத்து ஏற்பட்டு வருவதாகவும், அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாகவும் வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து விபத்துகளை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் தலைமுடியைப் பிடித்து பெண்கள் சண்டை.. வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?