நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர்காடு ஊராட்சியில் உள்ள கோயில் குளத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலைஉறுதி திட்டம் 2019-20ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் 7.88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் படித்துறை, தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. படித்துறை கட்டிவிட்டு குளத்தின் மையப்பகுதியில் உள்ள நந்தி மண்டபத்தை சுற்றி 10 அடி ஆழத்திற்கு குளத்தை ஆழப்படுத்திவிட்டு அதற்கு தடுப்புச்சுவர் கட்டியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது வாய்க்காலில் வந்த தண்ணீரை குளத்தில் நிரப்பியபோது தடுப்புச்சுவரின் ஒரு பகுதி இடிந்துவிழுந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கட்டுமான பணிகளுக்கு தரமான மணல், சிமெண்ட் பயன்படுத்தாமல் குளத்தில் இருந்த மணலை எடுத்தே கட்டிமுடிக்கப்பட்டு 13 நாள்களில் குளத்திற்கு தண்ணீர் விடும்போது தடுப்புச்சுவர் ஒருபக்கம் இடிந்து விழுந்துள்ளதாகவும், படித்துறை அளவிற்கு குளத்திற்கு தண்ணீர் நிரப்பினால்தான் படித்துறையின் நிலை என்னவென்று தெரியவரும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.