மயிலாடுதுறை: கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கசாமி (85) - சாரதாம்பாள் (75) தம்பதி. இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு தனது நான்கு மகன்களுக்கும் விவசாய நிலத்தையும், குடியிருக்க மனையையும் பிரித்து தங்கசாமி சொத்து எழுதித் தந்துள்ளார்.
மேலும் தனக்கென சிறிது நிலத்தையும், ஒரு குடிசை வீட்டையும் வைத்துக்கொண்ட தங்கசாமி அதில் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றிவரும் தங்கசாமியின் மூத்தமகன் உத்திராபதி தந்தையை ஏமாற்றி அவரது பாகத்தையும் தனது பெயரில் மாற்றி எழுதிக்கொண்டதாக தெரிகிறது.
அதன் பின்னர், பெற்றோரை அவர்கள் இருந்த வீட்டில் இருந்து அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உத்திராபதி பொருட்படுத்தாமல் தனது பெற்றோரை தொடர்ந்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.