மயிலாடுதுறை:தரங்கம்பாடி தாலுகா காட்டுச்சேரி சமத்துவபுரம் விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் பள்ளிக்கல்வித்துறையால் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தரங்கம்பாடி தாலுகா செம்பனார் கோயிலில் உள்ள கலைமகள் மெட்ரிக் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த கருவிழந்தநாதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் மகன் ரிஷிபாலன்(17) 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று ஓடுதளத்தில் ஓடும்போதே மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் எனக் கூறி மாணவனின் பெற்றோர்கள், உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாணவனின் உயிரிழப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டார்.
அதில், ‘காட்டுச்சேரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியை துவக்கி வைக்க வேண்டிய மாவட்ட கல்வி அலுவலர், தமிழக முதலமைச்சரின் வருகை காரணமாக தாமதமாக வந்ததால் மாணவரின் உயிர் பறி போனது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசு தகுந்த உதவிகளை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.