இயற்கைக்கும் மனிதனுக்குமிடையே போர் முனை இருந்தாலும் சில இடங்களில் மனிதனின் துணை கொண்டே இயற்கை வென்று வருகிறது. அதற்கான சான்று தான் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியின் வளம் மீட்பு பூங்கா. பாலைவனத்தில் சோலைவனம் அதிசயம் என்றால், அப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் தூய்மை பணியாளர் பரமேஸ்வரி.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார் பரமேஸ்வரி. அவரது கணவரும் அங்குதான் பணியாற்றி வருகிறார். இருவரும் வெளியூரிலிருந்து பிழைப்புக்காக வைத்தீஸ்வரன் கோயில் வந்த நிலையில், வாடகை வீட்டில் தங்கிக் வேலை பார்த்து வந்தனர்.
சோலைவனமாக மாற்றும் பரமேஸ்வரி இருவரது சம்பளமும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு போதியதாக இல்லாமல் போராட்டமாகவே இருந்து வந்தது. இதனால், தாங்கள் வசித்து வந்த வாடகை வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல், தங்க இடமின்றி இருவரும் வேலை பார்க்கும் குப்பை கிடங்கிலேயே தங்கி கொள்ள பேரூராட்சி செயல் அலுவரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
குப்பைக் கிடங்கிற்கும் காவலர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டியிருந்ததால், இவர்களையே அங்கு குடியிருக்க அனுமதித்து குப்பைக் கிடங்கின் காவலராகப் பணிபுரியவும் செயல் அலுவலர் கு.குகன் அனுமதித்தார்.
வைத்தீஸ்வரன் கோயில் - புங்கனூர் சாலையில் இருக்கும் குப்பைகள் பிரிக்கும் அந்தக் கிடங்கு 'வளம் மீட்புப் பூங்கா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. வைத்தீஸ்வரன் கோயில் பகுதி விவசாய நிலங்கள் அதிகமுள்ள பகுதி என்பதால் விவசாயிகள் உரத்தை வாங்கி செல்கின்றனர். இதை தினமும் பார்த்து பழகிய பரமேஸ்வரிக்கும் விவசாயத்தில் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், வீட்டு வாடகைக்கே வழியில்லாத நிலையில் விவசாய நிலத்துக்கு எங்கே போவது என்பதை நினைத்து வாடினார்.
இதுகுறித்து தூய்மைப் பணியாளர் பரமேஸ்வரி கூறுகையில், "நான் ஏதாவது செய்யணும்னு ரொம்ப நாள் ஆசை, பயிர் சாகுபடி செய்யலாம்னு யோசிச்சேன். நாம நினைக்கிறது எல்லாமே நடந்துடுது.? அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணுமே. ஒரு நாள் இப்படி படுத்துகிட்டு இந்த இடத்தையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருந்தேன். அப்பதான் இந்த யோசனை தோன்றியது. காலியாகக் கிடக்கும் இந்த இடத்தையே விவசாயத்துக்குப் பயன்படுத்தினால் நல்லாயிருக்கும் என நினைத்தேன். மறுநாள் வேலை முடிந்து வந்ததும் உடனடியாகக் களமிறங்கிட்டேன்" என மகிழ்ச்சி களிப்பில் கூறினார்.
முதலில் குப்பை மேட்டின் ஒரு பகுதி நிலத்தை மண் வெட்டியால் சமன்படுத்தி பக்குவப்படுத்தினார் பரமேஸ்வரி. அதில் என்ன சாகுபடி செய்யலாம் என யோசித்தவர் தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் சோளத்தை வாங்கி வந்து விதைத்திருக்கிறார். அலுவலகப் பணி நேரம் போக மீத நேரத்தில், அதை நீர்விட்டுப் பராமரித்து வந்தார். இவரது ஆர்வத்தால், குப்பை மேடாகக் கிடந்த அந்த இடம் தற்போது சோளக் கொல்லையாகக் காட்சியளிக்கிறது” என்றார்.
தூய்மைப் பணியாளரின் விவசாய ஆர்வத்தைப் பாராட்டிய பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் பரமேஸ்வரிக்கு மின்விசிறி ஒன்றைப் பரிசாக வழங்கியிருக்கிறார்.
இது குறித்து தமிழ்நாடு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டிவிட்டர் பக்கத்தில் "மனம் இருந்தால் மார்க்கம் உண்டென்பதற்கு பரமேஸ்வரி ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. அவரது இந்த தன்னம்பிக்கையும் மனம் தளராமையும் அவரது விவசாய ஆர்வத்திற்கு உரமாகி, நிச்சயம் வாழ்வில் வெற்றியெனும் பூ பூத்திடும் என்று அவரை உளமார வாழ்த்துவதாக" மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'ஏழு நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்' - முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்