3042 சவரன் தங்க நகைகள் நூதன முறையில் மோசடி: நடந்தது என்ன? மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த புங்கனூர் பகுதியை சேர்ந்த மஜிலா என்பவர் கொடுத்த புகாரின் பேரில், சீர்காழி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்த கும்பகோணத்தைச் சேர்ந்த பாத்திமா நாச்சியா மீது சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளைச்சேர்ந்த 15 பெண்கள் தங்களிடம் 3042 சவரன் தங்க நகைகளை நூதன முறையில் மோசடி செய்ததாகப் புகார் அளித்தனர்.
மயிலாடுதுறை, சீர்காழி, புத்தூர், கிளியனூர், கீராநல்லூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களிடம் 2011ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி சவரன் ஒன்றுக்கு 30 நாட்களில் 1500 ரூபாய் தருவதாகவும், 15 நாள்கள் முடிந்த பிறகு அவர்களது தங்க நகைகளை திருப்பித் தருவதாகவும் கூறி, பலரிடம் பல நூறு சவரன் தங்க நகைகளைப் பெற்றுள்ளார்.
தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேலாக சிலருக்கு பணமும் கொடுத்து வந்துள்ளார். இதனால் நகையை கொடுத்து பணம் பெற்றவர்கள், தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அறிமுகப்படுத்தி வைத்துள்ளனர். 2012ஆம் ஆண்டில் 3000 சவரன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு பாத்திமா நாச்சியா தலைமறைவானர்.
புங்கனூரை சேர்ந்த மஜிலா என்பவரிடம் 502 சவரன் தங்க நகைகளை வாங்கி ஏமாற்றிய நிலையில், பாத்திமா நாச்சியா மீது அவர் புகார் அளித்தார். பாத்திமா நாச்சியா விசாரணைக்காக சீர்காழி காவல் நிலையத்துக்கு இன்று அழைக்கப்பட்டார். பாத்திமா வரவுள்ள என தகவலை அறிந்து தங்க நகைகளை இழந்த 15 பெண்கள் தங்களது உறவினர்களுடன் சீர்காழி காவல் நிலையத்தில் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பாத்திமா நாச்சியா மீது முன்பே பொருளாதார குற்றப்பிரிவில் சுமார் 200 பேர் நாகையில் புகார் அளித்து, நகை மோசடி வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், சில மாதங்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நகை மோசடி சீர்காழி, சிதம்பரம், மயிலாடுதுறை மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 10,000 சவரனுக்கும் மேல் கூட பெற்று மோசடி நடந்திருக்கலாம் என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். சீர்காழியில் புகார் அளிக்க வந்த சிதம்பரத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மட்டுமே சுமார் 1100 சவரன் தங்க நகையை பாத்திமாவிடம் மோசடியால் இழந்துள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.300 கோடி செலவில் செங்கல்பட்டில் தாவரவியல் பூங்கா!