மயிலாடுதுறை திருவிழந்தூர் பெருமாள் கோயில் மேலவீதியைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் பூரணச்சந்திரன் (28). எட்டாம் வகுப்பு படித்த இவர், புரோகிதர் வேலை செய்து வருகிறார்.
இவர் தன்னுடன் தொழில் முறையில் பழக்கத்தில் உள்ள திருப்புங்கூர், மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், திருக்கடையூர், திருமணஞ்சேரி, பெருஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்களிடம், ஜெர்மனியில் நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான் பணிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளார்.
இவ்வாறு 26 இசைக் கலைஞர்களிடமும், ஜெர்மனியில் இசைக்கலைஞர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதன் மூலம் ஒவ்வொருவரிடமும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3.50 லட்சம் வரை என வசூலித்துள்ளார். இவ்வாறு பெறப்பட்ட பணம் அனைத்தும் வெளிநாடு செல்ல விசா, டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி, ரூ.54.30 லட்சம் வரையிலும் பெற்றுள்ளார்.
மேலும், அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான போலி ஆவணங்கள் மற்றும் போலி விசாவும் கொடுத்துள்ளார். தொடர்ந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி, இவர்களில் 15 பேரை மட்டும் வெளிநாடு அனுப்புவதாக கூறி சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவர்களை விட்டுவிட்டு பூரணச்சந்திரன் தலைமறைவாகியுள்ளார். இதனை அறியாத கலைஞர்கள், விமான நிலையத்தில் விசாரித்தபோது 15 பேருக்கு வழங்கப்பட்டதும் போலி விசா மற்றும் போலி டிக்கெட் என தெரிய வந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து இசைக்கலைஞர்கள் அனைவரும் கடந்த 1 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷாவிடம் புகார் அளித்தனர்.