மயிலாடுதுறை: குத்தாலம் அருகே பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (42). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் சந்துரு என்ற ஞானஸ்கந்தனும் (40) ஜூன் 30ஆம் தேதி இரவு டைல்ஸ் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் முடிந்துள்ளது.
இந்நிலையில் ஜூன் 1ஆம் தேதி ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இருவருக்கும் சமரசம் பேசும்போது சிவகுமாருக்கும், சந்துருக்கும் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதில், சந்துரு திடீரென சிவகுமாரின் வலதுபக்க காதை கடித்து துப்பியுள்ளார். இதைப் பார்த்த சிவக்குமாரின் உறவினர் கார்த்திகேயன் அவர்களை தடுக்கும்போது, சந்துரு கட்டையால் கார்த்திகேயனையும் தாக்கியுள்ளார். இதில் கார்த்திகேயனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.