நாகப்பட்டினம்:சிக்கலில் உள்ள சிங்காரவேலவர் கோயில் புகழ் பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் இந்த கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா பிரசித்தி பெற்றது. நவநீதேசுவரர் திருக்கோயிலில் சிங்கார வேலவர் வேல் வாங்கி, திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக வரலாறு கூறுகிறது.
சூரனை சம்ஹாரம் செய்ய வேல்நெடுங்கண்ணியிடம் சிக்கல் சிங்காரவேலவர் வேல் வாங்கும் நிகழ்வின்போது, முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை சிந்தும். உலகிலேயே எங்கும் இல்லாத இந்த அற்புத நிகழ்வினைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இதனிடையே, கந்த சஷ்டி விழா கடந்த 13ஆம் தேதி துவங்கிய நிலையில், தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் சிங்காரவேலவர் பவள ஆட்டுக்கிடா வாகனம், தங்கமயில் வாகனம், வெள்ளி ரிஷப வாகனம் என பல்வேறு வகையான வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா நேற்று காலை நடைபெற்றது. தெய்வானை, வள்ளி சமேத சிங்காரவேலவர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் தீப தூப ஆராதனைகளுக்குப் பிறகு, அங்கு கூடியிருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர், கோயிலின் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது.