தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் விக்னேஸ்வரன்(34). இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது பட்டதாரி இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளார்.
பின்னர் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அப்பெண் நிறுத்தியுள்ளார். இதன் பின்னரும் அந்த பெண்ணை விக்னேஸ்வரன் பின்தொடர்ந்ததோடு, அப்பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி பெண் வீட்டுக்குச் சென்று தகராறிலும் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, அப்பெண் வீட்டார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இரண்டு முறை புகார் அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை காவல்துறையினர், இருதரப்பினரையும் அழைத்து பேசி, ‘இனி அப்பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது’ என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த ஜூலை 12 ஆம் தேதி விக்னேஸ்வரன், அப்பெண்ணை கடத்த முயற்சி செய்துள்ளார்.
அப்போது அவரிடமிருந்து தப்பித்த இளம்பெண், மீண்டும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக, வீடுபுகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர்.