நாகை: காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை பயன்படுத்தி, மயிலாடுதுறை அருகே மது விற்பனையில் ஈடுபட்ட நபரை மயிலாடுதுறை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி அன்று மது விற்பனை நடைபெறாமல் கண்காணிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில், காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் நரசிம்மபாரதி, அசோக், செந்தில், கார்த்தி ஆகிய தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோடங்குடி கிராமத்தில் மது விற்பனை நடைபெறுவது தெரியவந்தது, அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோடங்குடி சோலையாம்பட்டினத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் இளையராஜா(36) என்பவர் அவரது வீட்டில் மது பாட்டில்கள் மற்றும் பாண்டி சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தனிப்படை போலீசார் அவரிடம் இருந்து 900 குவாட்டர் பாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் பாண்டி சாராயத்தை பறிமுதல் செய்து பெரம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இளையராஜாவை கைது செய்து மயிலாடுதுறை கிளைச் சிறையிலடைத்தனர். இதேபோல, காந்தி ஜெயந்தி தினத்தன்று 21 இடங்களில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:மது குடித்த சிறுவன் உயிரிழப்பு; பெற்றோர் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்