மயிலாடுதுறை மாவட்டம், மணக்குடியைச் சேர்ந்த ஜெயக்குமார் இவரின் மனைவி ராஜராஜேஸ்வரி. ஜெயக்குமாருக்கும், அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் இடையே மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள இடம் (வணிக வளாகம்) தொடர்பான சொத்து தகராறு ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனால் ஏற்பட்ட மோதலால் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ஜெயக்குமார் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். மயிலாடுதுறை காவல் துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது கட்டபஞ்சாயத்து செய்து மிரட்டுவதாகவும், ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாக ராஜராஜேஸ்வரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், கச்சேரி சாலையில் ராஜராஜேஸ்வரி நடத்திவரும் வணிக நிறுவனம் முன்பு கடந்த ஒருவாரமாக எதிர்தரப்பினர் ஜல்லி மற்றும் செங்கற்களை அடுக்கி வைத்துள்ளதுடன், விற்பனை விளம்பர பதாகையும் வைத்துள்ளனர்.