மயிலாடுதுறை: மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக டெல்டா மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக மாலை தொடங்கி நள்ளிரவு வரை கனமழை பெய்து வருகிறது. நேற்று காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
மயிலாடுதுறை, மணல்மேடு, செம்பனார்கோயில், சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மணல்மேடு பகுதியில் 7 சென்டிமீட்டர் மழையும், மயிலாடுதுறையில் 4.5 சென்டிமீட்டர் மற்றும் தரங்கம்பாடியில் 4 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
இந்த மழை காரணமாக வயல்களில் தாழ்வானப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த ஆண்டு காவிரியில் முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிட்ட காரணத்தால் விவசாயிகள் குறுவை சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டனர். மாவட்டத்தில் 92ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன.
ஒரு சில இடங்களில் முற்றிய நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் குறிப்பாக மயிலாடுதுறையில் சோழம்பேட்டை, மாப்படுகை, அருண்மொழித்தேவன், திருவிழந்தூர், பெரம்பூர், சேத்தூர், பொன்னூர், பாண்டூர், கஞ்சா நகரம், ஆனந்ததாண்டவபுரம் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் சுமார் 7ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி உள்ளன.
இதன் காரணமாக நெல் தரம் குறைவதுடன் அறுவடை இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்யும் பொழுது நெல்மணிகள் தரையில் சிதறி விளைச்சல் குறையும் என்றும்; இயந்திரத்தின் வாடகை அதிகரிக்கும் என்றும் விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு குறுவை சாகுபடி பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாடு அரசு அறிவிக்காத நிலையில் நிவாரணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக 7ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்... விவசாயிகள் வேதனை ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில், செலவு செய்த தொகை கூட கையில் கிடைக்காது என்று விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர். அரசு கொள்முதல் நிலையங்களை விரைவில் திறந்து, ஈரப்பதத்தைக் கணக்கில் கொள்ளாமல் நெல்லை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:மழை வெள்ளப்பாதிப்புகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை... காஞ்சி கலெக்டர் ஆய்வு