அரசுப் பள்ளியில் படித்த தமிழ்நாடு மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாடு அரசின் துணிச்சல்மிக்க நடவடிக்கைக்குப் பாராட்டுகள். அரசுப் பள்ளிகளில் படித்த தமிழ்நாடு மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க நேற்று தமிழ்நாடு அரசு அரசாணை வழங்கியிருப்பதை மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் தாமதித்த நிலையில், சமூகநீதியைக் காப்பாற்றும்வகையில் தமிழ்நாடு அரசு இம்முடிவை மேற்கொண்டுள்ளது துணிச்சலான நடவடிக்கை எனப் பாராட்டுகிறோம்.
இதற்கு எந்த ஆபத்தும் நேராத வகையில் தமிழ்நாடு அரசு கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.