நாகப்பட்டினம்: ஆந்திராவிலிருந்து நாகப்பட்டினம் வழியாக இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை காவல் துறையினர் நாகப்பட்டினம் அருகே புத்தூர் ரவுண்டானாவில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஆந்திராவிலிருந்து நாகப்பட்டினம் வழியாக வந்த இரண்டு கார்கள், சரக்கு ஆட்டோ வாகனங்களை தடுத்து நிறுத்தி தனிப்படை காவல் துறையினர் சோதனையிட்டனர். சோதனையில், சரக்கு ஆட்டோவில் தீவன மூட்டைகளின் அடியில் 250 பாக்கெட்டுகளில் 500 கிலோ கஞ்சா பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, கடத்தலில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், மாணிக்கவாசகம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீ ராஜேஸ்வரன், திருவண்ணாமலையைச் சேர்ந்த உமாபதி, சீர்காழியைச் சேர்ந்த சந்திரசேகர், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த படகு உரிமையாளர் சிங்காரவேல் உள்பட ஆறு பேரை கைதுசெய்து, அவர்களிடமிருந்து ரூ. 1.50 கோடி மதிப்புள்ள 500 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றி வாகனத்தையும் பறிமுதல்செய்தனர்.
மேலும், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைக் கைதுசெய்துள்ள நாகப்பட்டினம் தனிப்படை காவல் துறையினர், அவர்களை வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்தனர்.
இதையும் படிங்க: நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... ரூ.500க்கு சிலிண்டர்.... காங்கிரஸ் வாக்குறுதி