டேங்கர் லாரி மீது மோதிய அரசு சொகுசு பேருந்து மயிலாடுதுறை:திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி அரசு சொகுசு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புறவழிச் சாலையில் பாதரகுடி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க அரசு சொகுசு பேருந்தை ஓட்டுநர் திருப்ப முயன்றுள்ளார்.
அப்போது சாலை ஓரம் நின்ற டேங்கர் லாரி மீது பேருந்து அதிவேமாக மோதியதுடன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்திலும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சிதம்பரம் பள்ளிப்படை கிராமத்தைச் சேர்ந்த பத்மநாபன், அருள்ராஜ் மற்றும் பாலமுருகன் ஆகிய மூவரும் பேருந்துக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அதேநேரம், பேருந்தில் பயணம் செய்த 44 பேரில் பேருந்து நடத்துனர் விஜயசாரதி உள்பட 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனிடையே இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதில் நடத்துனர் விஜயசாரதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். மேலும், படுகாயம் அடைந்த 11 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நிஷா சம்பவ இடத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து விபத்து குறித்து கேட்டறிந்தார்.
அதேநேரம், விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் இருந்து ஆயில் கசிந்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கையாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுச்சாலை வழியாக பேருந்துகள் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருவதால், சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தினால் சாலையில் போதிய மின்விளக்குகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் இல்லாததால் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க:பணியின் போது திடீர் வலிப்பு.. ஆனாலும் 60 பயணிகள் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!