புரெவி புயல் காரணமாக ஐந்து நாள்களாக பெய்த கனமழையால் மயிலாடுதுறை அருகேவுள்ள சேமங்கலம் ஊராட்சியில் அய்யாவையனாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆலவேளி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
இந்நிலையில், சேமங்கலம் கூத்தூர் சட்ரஷ் அருகே கரையில் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் விவசாய நிலங்களுக்குள் அதிகளவில் புகுந்து வருகிறது. இதனால், 3ஆயிரத்து 500 ஏக்கருக்கும் மேல் விளைநிலங்கள் கழுத்தளவு நீரில் மூழ்கியுள்ளது.
தற்போது பொதுப்பணித் துறையினர் உடைப்பு ஏற்பட்ட பகுதியை மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்து வருகின்றனர். தொடர்ந்து தண்ணீர் வேகமாக புகுந்து வருவதால் சேமங்கலம் ஊராட்சி, வாங்கல், ஆண்டியூர், கண்டமங்கலம், புதுப்பேட்டை ஆலவேளி, கீழையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.
மழை நீரால் சேதமடைந்த விளைநிலங்கள் இது குறித்து விவசாயி கோவிந்தராஜ் கூறுகையில், “இனிமேல் நாங்கள் நடவு செய்த சம்பா பயிர்களை காப்பாற்ற முடியாது. எனவே உடனடியாக இப்பகுதியில் ஏற்பட்ட பயிர் சேதத்தை கணக்கிட்டு, தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பம்பை ஆற்றில் வெள்ளம்: 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு