நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், '’காவிரிப்படுகையில் 24 எண்ணெய் எரிவாயுக் கிணறுகள் அமைக்க 2013ஆம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் மக்கள் எதிர்ப்பின் காரணமாக கடந்த ஏழு ஆண்டுகளாக கிணறுகளை ஓ.என்.ஜி.சி.யால் அமைக்க முடியவில்லை. தற்போது அதனை அமைக்க கூடுதலாக மூன்று ஆண்டுகளுக்கு கால நீட்டிப்பு வழங்க சுற்றுச்சூழல்துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.
தமிழ்நாட்டில் காவிரி படுகையில் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. கிணறுகளை அமைக்க காலநீட்டிப்பை பெற்றுள்ளது கண்டனத்துக்குறியது.