மயிலாடுதுறையில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு மயிலாடுதுறை: கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று, சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடலோர மாவட்டங்களை சுனாமி பேரலைத் தாக்கியது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலால் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 கடற்கரை மாவட்டங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்தன.
இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் நீத்த நிலையில், மீனவர்கள் உள்பட பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். குறிப்பாக, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 6 ஆயிரத்து 66 பேர் உயிரிழந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 மீனவர் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆயிரக்கணக்கானோரும், தரங்கம்பாடியில் 315 பேரும் உயிரிழந்தனர்.
சுனாமியால் உயிரிழந்த அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினரும், கிராம மக்களும் ஆண்டுதோறும் நினைவஞ்சலி செலுத்தி வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில், 19ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினமான இன்று, தரங்கம்பாடியில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் கடற்கரை மீன் விற்பனை கூடத்தில் யாகம் வளர்த்து தர்ப்பணம் கொடுத்து, கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தி வழிபாடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, 700க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கருப்பு பேட்ச் அணிந்து மவுன ஊர்வலமாக, தரங்கம்பாடி கடை வீதியில் உள்ள நினைவு ஸ்தூபிக்குச் சென்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பின்னர், தரங்கம்பாடி பழைய ரயில் நிலையம் அருகே சுனாமியால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்த இடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இது போன்று மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சந்திரபாடி, சின்னூர்பேட்டை, சின்னங்குடி, குட்டியாண்டியூர், வெள்ளகோயில், மாணிக்கபங்கு, வானகிரி, பூம்புகார், பழையார், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் சுனாமியால் உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபி மற்றும் இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன், பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு, சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மறக்குமா நெஞ்சம்..! ஆழிப்பேரலையால் அதிர்ந்த தமிழகம்..! 19வது ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று!