தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

155 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு - ஆட்சியர் லலிதா

மயிலாடுதுறை: சம்பா பருவத்துக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் 155 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.

District Collector Lalitha
மாவட்ட ஆட்சியர் லலிதா

By

Published : Jan 23, 2021, 10:56 AM IST

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது குறித்த விவசாயிகள் கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று(ஜன 22) நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் உள்ளிட்ட அலுவலர்களும், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுக்கா விவசாயிகளும் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சம்பா சாகுபடி அறுவடை பணிகள் தொடங்க உள்ள நிலையில் 155 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. புரெவி, நிவெர் புயல் காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளதால் ஏற்கெனவே 17 விழுக்காடு இருந்த நெல்லின் ஈரப்பதத்தை 20 விழுக்காடாக உயர்த்தி கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது என்றார்.

விவசாயிகள் கூறுகையில், கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்யச் சென்றால் மூட்டை ஒன்றுக்கு ரூ.50 லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல்லை கொள்முதல் செய்கின்றனர். 40 கிலோ மூட்டைக்கு 42 கிலோ எடை வைத்து எடுத்து கொள்கின்றனர்.

1000 மூட்டை நெல் விற்பனை செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வசூல் செய்கிறார்கள். நிலைய ஊழியரிடம் கேட்டால் இந்த தொகையில் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் முதல் மேலிடம் வரை தரவேண்டும் என்று அலட்சியமாக தெரிவிக்கிறனர். அலுவலர்களிடம் கூறினால் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை.

இனிமேல் இந்த ஊழலை ஒழிக்க முடியாது. கேட்கும் தொகையில் பாதியாக குறைத்துக்கொள்ள தமிழ்நாடு அரசு நடவடிகை எடுக்கவேண்டும், மூட்டைக்கு ரூ.50 கேட்பதை குறைத்து 25 ரூபாய் வாங்கிக்கொள்ள அரசே நடவடிக்கை எடுத்தால் அதுவே போதும் என்று மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து 04364-259135 என்ற எண்ணுக்கோ அல்லது 9488553826, 9443940864 என்ற செல்போன் எண்ணுக்கோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கனமழையால் ராமநாதபுரத்தில் 89 ஆயிரம் ஹெக்டர் நிலங்கள் பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details