மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய வட்டாரங்களில் 1 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தாண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், சம்பா சாகுபடியில் முழு மூச்சாக விவசாயிகள் ஈடுபட்டனர்.
பயிர்கள் தண்டு உருண்ட நேரத்தில் நிவர் புயல், புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் 4 தாலுக்காக்களிலும் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியது. தொடர் மழையால் வெள்ளநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டு பயிர்களை சேதப்படுத்தியது. தற்போது ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 25 ரூபாய் ஆயிரம் விவசாயிகள் நிவாரணம் கேட்ட நிலையில், ஒரு ஹெக்டேருக்கு (2.5 ஏக்கர்) 20 ஆயிரம் ரூபாய் என்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
அதன் பின்னர் தண்ணீர் வடிந்ததும் பயிருக்கு உரம், பூச்சிமருந்து தெளித்து விவசாயிகள் ஒரளவிற்கு பயிர்களைக் காப்பாற்றி வந்தனர். செப்டம்பர் மாதத்தில் நடவு செய்யப்பட்ட பயிர்கள் தற்போது கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் மீண்டும் விவசாயிகளுக்கு பேரிடியாக விழுந்தது, தொடர் மழை.