அரசு அலுவலர்கள் அலட்சியம் - பராமரிப்பின்றி 10 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சேதம் - திறந்தவெளி சேமிப்பு கிடங்கு
15:50 December 23
நாகை: திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் முறையான பராமரிப்பின்றி இருந்த 10 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைந்து, அவற்றிலிருந்து நெல் நாற்றுகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.
நாகை மாவட்டத்தை அடுத்த காடம்பாடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திறந்தவெளி நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகையில் பெய்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
நாகை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட ஒரு லட்சம் மெட்ரிக் டன் குறுவை நெல்லினை, நுகர்பொருள் வாணிபக்கழகம் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. அவற்றில் 10 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் காடம்பாடி திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைத்து தார்பாலின் போட்டு மூடிவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மூட்டைகளை சரியான முறையில் மூடி பாதுகாக்காததால் நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து, முளைக்கத் தொடங்கியுள்ளன. மழை நீரிலிருந்து நெல் மூட்டைகளை பாதுகாக்க நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்காமல், மக்கள் வரிப்பணத்தையும், விவசாயிகளின் உழைப்பையும் வீணடிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.