மதுரை:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மதுரை மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் பலர் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாநகராட்சி 3ஆவது வார்டு ஆனையூர் பகுதியில் சுயேச்சையாக போட்டியிட, ஏர்கிராஃப்ட் இன்ஜினியர் பணியை உதறிவிட்டு ஜாஃபர் ஷெரீப் என்ற இளைஞர் இன்று கையில் எலிப்பொறியுடனும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுடனும் வந்து மனுதாக்கல் செய்தார்.
இது குறித்து இளைஞர் ஜாஃபர் ஷெரீப் கூறுகையில், “நான் இந்த மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட முக்கியக் காரணம் என்னவென்றால், படித்தவர்கள் வாக்களிக்க வருவதை உறுதி செய்யத்தான்.
அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்து மனுதாக்கல் செய்துள்ளேன்.
தேர்தல் நாளன்று கிடைக்கும் விடுமுறையைப் படம் பார்ப்பதற்கும், சமூக வலைதளங்களில் பொழுதுபோக்குவதற்கும்தான் பயன்படுத்துகின்றனர். இந்தியாவை ஜப்பானாக மாற்றுவேன், சிங்கப்பூராக மாற்றுவேன் என்பதிலெல்லாம் எனக்குத் துளியும் நம்பிக்கையில்லை.
மாதிரி தூய்மை வார்டாக மாற்ற வேண்டும் என்பதுதான் லட்சியம். பிற அனைத்து வார்டுகளுக்கும் என்னுடைய வார்டு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.