தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருட்டு ரயில்.. கோடீஸ்வர வாழ்க்கை.. பலே இளைஞர் சிக்கியது எப்படி? - the gateway hotel pasumalai madurai

திருட்டு ரயிலில் தென்னிந்தியாவில் பல இடங்களுக்குப் பயணம் செய்து, தன்னை கோடீஸ்வரன் என்று பொய் சொல்லி, பல நட்சத்திர ஹோட்டல்களில் மோசடியில் ஈடுபட்டு வந்த ஆந்திராவை சேர்ந்த இளைஞன், மதுரையில் கையும் களவுமாக பிடிபட்டார்.

மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது
மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது

By

Published : Jun 19, 2023, 10:36 PM IST

மதுரை:ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த, கூலித் தொழிலாளி பரோடா சீனு என்பவரின் மகன் பரோடா சுதிர். இவர் தனது படிப்பை முடித்துவிட்டு, தான் ஆடம்பரமாக ஒரு கோடீஸ்வரர்களைப் போல வாழ வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இதற்காக சுதிர் தனது ஊரிலிருந்து ரயிலில் பயணச் சீட்டு கூட எடுக்காமல் ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள 5 மற்றும் 3 நட்சத்திர உணவு விடுதிகளில் தன்னை கோடீஸ்வரன் என்று பொய் சொல்லித் தங்கி மோசடி செய்து வந்துள்ளார்.

இது போன்ற நட்சத்திர உணவு விடுதிகள் உள்ள பகுதிகளுக்குச் சென்று, அங்கு ரயிலிலிருந்து இறங்கியவுடன் ரயில் நிலையத்தில் உள்ள கழிவறைக்குச் சென்று, தன் பையில் வைத்திருக்கும் கோட் சூட், கூலிங் கிளாஸ், ஷூ ஆகியவை அணிந்து கொண்டு புறப்பட்டுச் செல்வார்.

ஒவ்வொரு ஹோட்டலின் அருகிலிருந்துகொண்டே அந்த உணவகத்துக்கு போன் செய்து, தன்னை பெரிய பிஸ்னஸ்மேன் போல அறிமுகம் செய்து கொண்டு, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசி தங்கும் அறைகளைப் பதிவு செய்வதோடு, தன்னை பிக்-அப் செய்ய வாகனம் அனுப்பி விடுமாறு கூறி அந்த உணவு விடுதிக்குச் சொந்தமான வாகனத்திலேயே சென்று, தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கிவிடுவார். பின் அங்கிருந்தபடியே வகை வகையான உணவுகளை சாப்பிடுவது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் பரோடா சுதிர்.

மேலும் அதே ஹோட்டலுக்கு சொந்தமான வாகனத்தில், தான் பிஸினஸ் மீட்டிங் போக வேண்டும், ஷாப்பிங் செல்ல வேண்டும் எனக் ஏதாவது ஒரு பொய் காரணம் கூறி காரில் சென்றுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்று விடுவார். சில நட்சத்திர உணவு விடுதிகளில் முக்கிய நபர்கள் தான் தங்குவார்கள் என்பதால், தங்கி முடித்து அறையை காலி செய்யும் போது மட்டுமே பணம் செலுத்துவார்கள் என்பதை அறிந்து வைத்துக்கொண்டு சுதிர் இது போன்ற மோசடிகளை அரங்கேற்றியுள்ளார்.

மேலும், தனது அடையாளமாக வழங்கிய ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளில் முகவரியை மட்டும் மாற்றிக் கொடுத்துவிட்டு, போலியான செல்பேசி எண்களையும் கொடுத்துவிட்டு நூதன முறையில் மோசடி செய்து, ஒரு நாள் இரு நாளில் கோடீஸ்வர வாழ்க்கையை வாழ்ந்து பல்வேறு உணவகங்களில் தொடர்ந்து தனது ஏமாற்று வேளையை நடத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மதுரை, பசுமலை பகுதியில் உள்ள தாஜ் உணவகத்திலும் இதே போன்று ரூம் புக் செய்து தனது மோசடி வேளையை அரங்கேற்றிய சுதிர், தங்கிவிட்டுத் தப்பியோட முயன்றபோது ஹோட்டல் வாட்ச் மேனின் செல்போனை திருடி செல்ல முயன்றுள்ளார். அப்போது கையும் களவுமாகப் பிடித்த வாட்ச்மேன் அந்த இளைஞரைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், சுதிர் பல்வேறு ஹோட்டல்களிலும் இது போன்று மோசடி செய்து ஏமாற்றி ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதும் போலீசாருக்கு தெரிய வந்ததுள்ளது.

ஒரு நாள் இரண்டு நாளாவது கோடீஸ்வரனாக ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற பேராசையில் ரயிலேறி சென்று பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற மோசடிகளைச் செய்த இளைஞர் சுதிரின் வாக்குமூலம் மதுரை காவல்துறையினரைத் திகைக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க:வேலை வாங்கித் தருவதாக பண மோசடி; 'மிமிக்ரி' இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details