சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த ஆண்களுக்கு விருது வழங்கி மதுரையிலுள்ள பெண்கள் அமைப்பு ஒன்று சிறப்புச் செய்துள்ளது.
சர்வதேச ஆண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ஆம் தேதி கொண்டாடப்பட்டுவருகிறது. மதுரையிலுள்ள வுமன் புரோபஷனல் கனெக்ட் என்ற பெண்களுக்கான அமைப்பு, கடந்தாண்டிலிருந்து உலக ஆண்கள் தினத்தை வெகுசிறப்பாகக் கொண்டாடிவருகிறது.
அந்த அமைப்பின் சார்பாக மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 50 ஆண்களைத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் சாதனைகளைக் கௌரவிக்கும் வகையில் விருது வழங்கப்பட்டது. மதுரை மாட்டுத்தாவணி அருகிலுள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெற்ற இந்த விழாவில், பல்வேறு துறை சார்ந்த தொழிலதிபர்கள், காவல் துறை அலுவலர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
தமிழிசை அறிஞர் மம்மது, தொல்லியல் அறிஞர் வெ.வேதாசலம், பூரண சுந்தரி ஐஏஎஸ் தந்தை முருகேசன், சுற்றுலா வழிகாட்டி நாகேந்திர பிரபு, கணினி மற்றும் இயற்கை வேளாண்மை ஆர்வலர் முருகானந்தம், மத்திய அரசின் விருது பெற்ற ரஞ்சித், பத்திரிகையாளர் அண்ணாமலை உள்ளிட்ட 50 பேர் 2020-ஆம் ஆண்டிற்கான ரியல் ஹீரோ விருதைப் பெற்றனர்.