தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயிலில் விபத்து ஏற்படாமல் தடுத்த பணியாளருக்கு பாதுகாப்பு விருது - தென்னக ரயில்வே

கொல்லம் - சென்னை வரை செல்லும் ரயிலின் சக்கர அமைப்பில் இருந்த விரிசலைக் துரிதமாக கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு தகவல் வழங்கி செயல்பட்ட செங்கோட்டை ரயில்வே பணியாளர் ரகுபதிக்கு பாதுகாப்பு விருது அளிக்கப்பட்டது.

ரயிலில் விபத்து ஏற்படாமல் தடுத்த பணியாளருக்கு பாதுகாப்பு விருது
ரயிலில் விபத்து ஏற்படாமல் தடுத்த பணியாளருக்கு பாதுகாப்பு விருது

By

Published : Jun 6, 2023, 8:45 AM IST

மதுரை:16102 என்ற எண் கொண்ட கொல்லம் – சென்னை எழும்பூர் வரை செல்லும் சென்னை எழும்பூர் விரைவு ரயில், நேற்றைய முன்தினம் (ஜுன் 4) வழக்கம்போல் செங்கோட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது, செங்கோட்டை ரயில் நிலைய வண்டி மற்றும் வேகன் டெக்னீஷியன் ரகுபதி வழக்கமான பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில், எஸ் 3 பெட்டியின் (இஞ்சினில் இருந்து 7வது பெட்டி) அடிப்பகுதியில் சக்கர அமைப்பில் (போகி) விரிசல் இருப்பதை ரகுபதி பார்த்துள்ளார்.

எனவே, இது குறித்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அதில் இருந்த பயணிகள் மாற்று பெட்டிகளில் மாற்றி வைக்கப்பட்டு, அந்த எஸ் 3 பெட்டி மட்டும் ரயிலில் இருந்து கழற்றி விடப்பட்டது. தொடர்ந்து மதுரையில் அந்த ரயிலில் புதிதாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டு சென்னை புறப்பட்டுச் சென்றது.

இதையும் படிங்க:சென்னை - கொல்லம் விரைவு ரயிலில் விரிசல்..! அலார்ட்டான ரயில்வே ஊழியர்கள்.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

மேலும், ரயிலில் இருந்த விரிசலைக் கண்காணித்து தகவல் தெரிவித்த ரகுபதிக்கு அவரது பொறுப்புணர்வு, உடனடி தகவல் மற்றும் ஒட்டு மொத்த பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மதுரை கோட்டத்தின் வாராந்திர பாதுகாப்பு கூட்டத்தில் பாதுகாப்பு விருது வழங்கப்பட்டது.

அப்போது, மதுரை கோட்ட மேலாளர் பி. அனந்த் இந்த விருதை வழங்கி ரகுபதியைப் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் டி.ரமேஷ் பாபு, முதுநிலை கோட்ட இயந்திரவியல் பொறியாளர் பி.சதீஷ் சரவணன், மூத்த கோட்ட பாதுகாப்பு அதிகாரி மொஹிதீன் பிச்சை உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜூன் 2ஆம் தேதி ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. இதனையடுத்து பல்வேறு வகையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ரயில்வே துறையில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், மதுரை ரயில்வே கோட்டம் தனது பணியாளரின் பொறுப்புணர்வை கருத்தில் கொண்டு, பயணிகள் மீதான அவரது அக்கறையையும் பாராட்டி தொழில்நுட்ப பணியாளர் ரகுபதிக்கு விருது வழங்கி பாராட்டியது ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், மதுரை கோட்டத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும், சந்திப்புகளிலும் சிறுசிறு ஸ்டேஷன்களிலும் இதுபோன்ற கண்காணிப்பு பணிகள் இயல்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது மேலும் தீவிரமாக தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். அதுபோன்று தொழில்நுட்ப பணியாளர்களால் ஏதேனும் கோளாறுகள் உணரப்படும் நிலையில், உடனடியாக தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சேதமடைந்த கட்டடங்களில் அதிகாரிகள் குடியிருப்பீர்களா? சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details