மதுரை நத்தம் சாலையிலுள்ள நாராயணபுரம் மந்தையம்மன் கோயிலில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்பகுதியைச் சேர்ந்த இந்திராணி, ஞானசுந்தரி, தமிழரசி, அழகம்மாள் ஆகிய நான்கு பெண்கள் அணிந்திருந்த 18.5 சவரன் தங்க நகைகளை கூட்ட நெரிசலை சாதகமாகப் பயன்படுத்தி, அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் அப்பெண்கள் சார்பாக நான்கு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதனையடுத்து வழக்கில் தொடர்புடைய நபர்களைக் கண்டறிவதற்காக மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா உத்தரவின்பேரில் தல்லாகுளம் சரக உதவி ஆணையர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை காவல் துறையின் தீவிர முயற்சியால் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய கோவை மாவட்டம் துடியலூர் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி, திவ்யா, அமுதா, திருச்சி சமயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரியா ஆகிய நான்கு பெண்களைக் கைதுசெய்தனர். அப்பெண்கள் பிப்ரவரி 2ஆம் தேதி கைதுசெய்யப்பட்டு, அவர்களிடமிருந்த 15.5 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
அவர்கள் அனைவரும் நீதித்துறை நடுவர் முன்பு முன்னிறுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். புகார் அளிக்கப்பட்ட 24 மணிநேரத்தில் தொடர்புடையவர்களைக் கைதுசெய்த, மாநகர துணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர் ரவி, குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேசன் ஆகியோரை நாராயணபுரம் பொதுமக்களும், மதுரை மாநகர காவல் ஆணையரும் பாராட்டினர்.
இதையும் படிங்க:கல்குவாரி விபத்து! - சைலேந்திரபாபு நேரில் ஆய்வு!