கரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு வருகிற மே 17ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சில தளர்வுகளை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது.
இதில் மே-7ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள சென்னையைத் தவிர்த்து, அனைத்து பகுதிகளிலும் சில கட்டுப்பாடுகளுடன் மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மதுபான கடைகளுக்கு மதுபானம் வாங்க வருபவர்கள், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்தவும் வயது வாரியாக நேர கட்டுப்பாடுகளுடன் மது பிரியர்கள் வாங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் மக்கள் பாதை மகளிர் பிரிவைச் சேர்ந்த மூன்று பெண்கள் மதுரை மாவட்டம், திருநகர்ப் பகுதியில் உள்ள மதுபான கடையில் வரிசையில் குடைபிடித்துக் கொண்டு, மது வாங்க வரிசையில் நின்றனர்.
அப்போது அவர்களைக் கண்டதும் திகைப்பில் இருந்த காவல் ஆய்வாளர் அவர்களிடம் இந்த வரிசை காய்கறிகள் வாங்குவதற்கு இல்லை என்று அவர்களிடம் கூறியபோது, நாங்கள் மதுபானம் வாங்கவே வந்திருப்பதாக கூறியுள்ளனர்.