தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மரத்தை வெட்டாதே' - ஒற்றை மனுஷியாய் போராடிய பெண் - மரங்களை வெட்டுதல்

மரத்தை வெட்டும் மதுரை மாநகராட்சியின் செயலைக் கண்டித்து ஒற்றை மனுஷியாய் அமர்ந்து போராடிய பெண்மணியின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

ஒற்றை மனுஷியாய் போராடிய பெண்
ஒற்றை மனுஷியாய் போராடிய பெண்

By

Published : Oct 14, 2020, 11:02 PM IST

மதுரை: நான்கு மாசி வீதிகளிலும் சாலையை அகலப்படுத்தி, சாக்கடைகள் அமைக்கும் பணி நடைபெறுவதால் சாலை ஓரங்களில் இருக்கும் மரங்களை வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகர்ப்புறப் பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறிப்பாக மதுரையின் நான்கு மாசி வீதிகளிலும் சாலையை அகலப்படுத்தி சாலையின் ஓரங்களில் சாக்கடைகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

ஒற்றை மனுஷியாய் போராடிய பெண்

இதனால் அந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் இருக்கும் மரங்கள் அனைத்தும் மதுரை மாநகராட்சியால் வெட்டப்பட்டு வருகின்றன. மதுரை யானைக்கல் அருகே வடக்கு மாசி வீதி சந்திப்பில் ஏறக்குறைய 10-க்கும் மேற்பட்ட மிகப் பழமையான மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் கீழே தான் பெண்கள் பழ வியாபாரம் செய்து வருகின்றனர்.

மதுரை மாநகராட்சி இன்று (அக்.14)அந்த மரங்களை வெட்டத் தொடங்கியபோது, தமிழ்நாடு காந்தி மன்றத் தலைவி பாண்டீஸ்வரி, மரத்தை வெட்டவிடாமல் தடுத்துப் போராட்டம் நடத்தினார். ஆனாலும் அவரது வேண்டுகோளுக்கு செவிமடுக்காத ஊழியர்கள் பாண்டீஸ்வரி மரத்தடியில் உட்கார்ந்திருந்தபோதே, வெட்டி கொண்டிருந்ததுதான் அவலத்தின் உச்சம்.

இது குறித்து பேசிய பாண்டீஸ்வரி, 'இந்தப் பகுதியில் மிகப் பழமையான மரங்கள் இவை. இதன் கீழே தான் பெண்கள் அனைவரும் பழ வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை வெட்டக் கூடாது என்பதற்காக பல முறை மதுரை மாவட்ட ஆட்சியரிடமும், மாநகராட்சி அலுவலகத்திலும் புகார் செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் இன்று(அக்.14) திடீரென சத்தமின்றி மரத்தை வெட்டத் தொடங்கிய தகவல் அறிந்து நான் உடனடியாக அங்கு அமர்ந்து போராட்டம் நடத்தினேன்.

ஆனால், கொஞ்சமும் அதைப்பற்றி கவலைப்படாமல் மரம் வெட்டுவதில் குறிக்கோளாகக் கொண்டு வெட்டி வருகின்றனர். உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கூட சுற்றுச்சூழலை சீரழிப்பதில் மதுரை மாநகராட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் பழமையான மரங்களையாவது இவர்கள் விட்டு வைக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்' எனக் கூறினார்.

பாண்டீஸ்வரியின் இந்தப் போராட்டம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மதுரை முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் மரங்கள் வெட்டப்பட்டு வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தெலங்கானாவில் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் ஹைதராபாத்

ABOUT THE AUTHOR

...view details