தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

World Women's Day: 'பெண்களுக்கான சமூகம் முதிர்ச்சி பெறவில்லை' - மனம் திறக்கும் பல்துறை பெண்கள்! - ஆணின்றி பெண்ணில்லை

ஒவ்வொரு ஆண்டும் உலகப் பெண்கள் தினத்தை எல்லோரும் கொண்டாடி மகிழ்ந்தாலும் அது ஒரு சடங்காக மாறிவிட்டதோ என்ற கவலை அதிகரிப்பதுடன் அவர்களுக்கான சமூகம் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை என்கின்றனர் பலதுறைகளில் கோலோச்சும் பெண்கள். இதுகுறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

பெண்கள் தினம்
பெண்கள் தினம்

By

Published : Mar 6, 2023, 1:21 PM IST

மனம் திறக்கும் பல்துறை பெண்கள்

மதுரை:உலகத்து உயிரினத் தொடர்ச்சியில் மனிதனின் பரிணாமம் நிகழ்ந்த பின்னர், ஆண் - பெண் எனும் ஒன்றொடொன்று இயைந்த கட்டமைப்பில்தான் பெரும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. ஆணின்றி பெண்ணில்லை, பெண்ணின்றி ஆணில்லை எனும் இயற்கையான பண்பில், ஆதிக்க மனோபாவம் மேலோங்கத் தொடங்கியதும் தாய்வழிச் சமூகத்திலிருந்து தந்தை வழிச் சமூகமாக மாறத் தொடங்கியது. இன்றைக்கும் இந்தியாவிலுள்ள பல்வேறு பழங்குடிகளின் வாழ்வியல் தாய்வழிச்சமூகத்தை தொன்மத்தில் உள்ளவாறே பாதுகாத்து வருவதும் இங்கு கவனிக்கத்தக்கது.

இன்று நாகரிக சமூகமாக மனிதன் மாறிவிட்டான் என்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், பெண்கள் பொதுவெளியில் தங்களுக்கான இடத்தைப் பெறுவதில் பெரும் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதும் எதார்த்த உண்மை. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கடந்த நூற்றாண்டில் பெண் தொழிலாளருக்கான சிகாகோ நகர போராட்டத்தின் விளைவாக எழுந்த மார்ச் 8 உலகப் பெண்கள் தினம், வெறும் அடையாளச் சடங்காக மாறிவிட்டதோ என்ற அச்சமும் ஏற்படத் தொடங்கியிருக்கிறது என்பதை இன்றைய பெண்கள் கவலையோடு பகிர்கின்றனர். அந்த அடிப்படையில் ஈடிவி பாரத் செய்தி ஊடகம் பல்துறையில் சிறந்து விளங்கும் பெண்களிடம் உலகப் பெண்கள் தினத்தை ஒட்டி நேர்காணல் செய்தது. அதன் தொகுப்பு தான் இந்தக் கட்டுரை.

பெண் உரிமையை மறுக்கும் பெற்றோர்:ஏழைக் குழந்தைகளுக்காக தமிழ் வழிக் கல்வியில் அரசு அங்கீகாரத்துடன் விளம்பரமின்றி சாதித்து வரும் மதுரை மாவட்டம் நாகமலை அருகேயுள்ள பல்லோட்டி மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் காமாட்சி கூறுகையில், "பெண்களுக்கான பிரச்சினை என்பது உலகம் தழுவியது என்பதை சர்வதேச பெண்கள் தினம் என்று குறிப்பிடும்போதே புரிந்து கொள்ள முடிகிறது. நான் சார்ந்துள்ள கல்வித்துறையைப் பொறுத்தவரை, எங்கள் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்ட மாணவிகள், விரைவிலேயே திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்படும் நிலையுள்ளது.

திருமணம் செய்து கொடுத்துவிட்டால் தங்கள் கடமையும் பொறுப்பும் முடிந்துவிடுவதாக எண்ணிக்கொள்ளும் பெற்றோர்கள் இன்னும் நம்மிடையே உள்ளனர். ஆனால், அந்தக் குழந்தை எங்களிடம் பயிலும்போது மருத்துவர், ஆசிரியர், ஐஏஎஸ் என நிறைய கனவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள். தங்கள் குழந்தைகளுக்கான உரிமை மறுப்பை பெற்றோர்களே செய்கிறார்கள் எனும்போது மிகுந்த வேதனை கொள்கிறோம்.

அதேபோன்று ஒரு பெண் தனது கணவர் இறந்துவிட்டால், குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது மட்டுமே அவளது பொறுப்பாக மாறிவிடுகிறது. ஆனால், இதற்கு நேர் எதிராக மனைவி இறந்துவிட்டால், அந்த ஆண் மற்றொரு திருமணம் செய்துகொண்டு விடுகிறார். காரணம், குழந்தைகளைப் பராமரிக்க, பாதுகாக்க ஒரு பெண் தேவைப்படுகிறாள்.

இதனைத் தவிர்க்க வேண்டுமானால் கணவன் - மனைவி, ஆண் - பெண் இருவருக்குமான ஜனநாயகத்தன்மையிலான புரிந்துணர்வு அவசியமாகிறது. பெண்கள் தினம் என்பது அந்த ஒருநாளில் மட்டுமல்ல என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியதும் நம் கடமையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் பெண்கள் தினமாகக் கொண்டாடும் சமூகம் மலரச் செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்புமாகும்" எம்றார்.

பெண் விடுதலை: அரசியலைப் பொறுத்தவரை பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ள காலகட்டத்தில், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் சரிபாதி பெண்களுக்கு இடம் வழங்கி பாலின சமநிலையை ஏற்படுத்தி வரும் நாம் தமிழர் கட்சியின் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளராகக் களம் இறங்கிய ரேவதி கூறுகையில், "பெண்கள் பொதுவெளியில் அரசியல் பணியாற்ற வருவது மிக சவாலாக உள்ளது. அண்மையில்கூட எங்கள் கட்சியின் மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் மிகக் கடுமையான வசைச்சொற்களையும், தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.

பெண்கள் பொதுவெளிக்கு வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இது போன்ற இழிவான செயல்பாடுகளால் பெண்ணை முடக்கி வைத்துவிட முடியாது. பெண் விடுதலை இல்லையென்றால் மண் விடுதலை இல்லை என்பதை எங்களது கொள்கை முழக்கமாக நாங்கள் கொண்டுள்ளோம்.

ஆனால், நாங்கள் முன்னெடுத்த பாலின சமநிலையை எந்த ஊடகங்களும் பொதுவெளிக்குக் கொண்டுவரவில்லை. ஆனால், பெண்களுக்கு சம உரிமை அளிப்பதாகக் கூறிக் கொள்ளும் கட்சிகளில், பெண்களின் பெயரை வைத்துக் கொண்டு கணவர்களோ அல்லது அப்பெண்களைச் சார்ந்த ஆண்களோ இயங்கும் காட்சியைத்தான் நாம் பார்க்க முடிகிறது. இந்த நிலை மாற வேண்டும். பெண்களைப் போற்றாத எந்த சமூகமும் நாகரிமிக்கதாக இருக்க முடியாது" என்றார்.

குடும்ப சூழல்:சிறு, குறு தொழில்களில் பெண்களின் பங்கேற்பு இருந்தாலும், அது மேலும் அடர்த்தியாக வேண்டும். அதற்கான புறச்சூழலை அரசு உருவாக்க வேண்டும் என்கிறார் மதுரையைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோரான சுந்தரி. அவர் கூறுகையில், "சிறுதானிய உணவுகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதோடு வருகின்ற இளைய தலைமுறையினருக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்க வேண்டும் என்பதும்தான் எங்களது நோக்கம். இந்தத்துறையைப் பொறுத்தவரை நிறைய பெண் தொழில் முனைவோர் வருகின்றனர். அதற்கான சூழல் சாதகமாக உள்ளது. ஆனால் இதை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்பார்த்திருக்க முடியாது.

நாங்கள் அதுபோன்ற இளம் பெண் தொழில் முனைவோருக்காக பயிற்சியும் ஊக்கமும் அளித்து வருகிறோம். ஆனால், அவர்கள் சார்ந்த குடும்பத்தின் ஆதரவு எதிர்பார்த்த அளவிற்கு இருப்பதில்லை. இதன் காரணமாக பெண்களின் வருகை மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. இந்தத் துறையை பொறுத்தவரை சுயஊக்கம் மிகவும் அவசியமான ஒன்று. குடும்பக் காரணிகள் அதனை பின்னுக்குத் தள்ளிவிடுவதுதான் வேதனை" என்றார்.

பெண்களின் பங்கேற்பு அதிகமாகும் ஒரு சமூகம்தான் முதிர்ச்சியானதாகவும், நாகரிகம் மிக்கதாகவும் உணரப்படும். அந்த வகையில், என்னதான் உலக பெண்கள் தினத்தைக் கொண்டாடுபவர்களாகவும், போற்றுபவர்களாகவும் இருந்தாலும்கூட, பெண்ணுக்கான பொதுவெளியை ஜனநாயகப்பூர்வமாக உருவாக்கி, அதனைச் சிறந்த முறையில் கட்டமைப்பதில் தான் அந்த நாளின் உண்மையான பொருளும், நோக்கமும் இருக்க முடியும்.

இதையும் படிங்க: தமிழன்டா என்னாளும்..! சொன்னாலே திமிரேறும்..! மலேசியா அரசியலை தீர்மானிக்கும் தமிழர்கள்!

ABOUT THE AUTHOR

...view details