தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குற்றப் பத்திரிகையில் பெயரை நீக்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட பெண் ஆய்வாளர் கைது! - பெயரை நீக்கக்கோரி

மதுரை: குற்றப் பத்திரிகையில் இருந்து பெயரை நீக்குவதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்ச கேட்டதாக எழுந்த புகாரின்பேரில், செக்கானூரணி பெண் காவல் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 30 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

woman-inspector-arrested-for-taking-bribe-to-drop-accused-name-from-charge-sheet
woman-inspector-arrested-for-taking-bribe-to-drop-accused-name-from-charge-sheet

By

Published : Nov 27, 2020, 12:33 PM IST

Updated : Nov 27, 2020, 1:18 PM IST

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செக்கானூரணி பெண் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் அனிதா. கடந்த 2017ஆம் ஆண்டு திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவருக்கும், அவர் வீட்டின் அருகேயுள்ள நல்லதம்பி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறில் முத்துக்கும், அவருடைய மனைவிக்கும் படுகாயம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக, செக்கானூரணி காவல் நிலையத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி முத்து அளித்த புகாரின்பேரில், அதே பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி உள்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர், நல்லதம்பியை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், இச்சம்பவத்தில் தொடர்பில்லாத தன்னுடைய மகன் மாரி, பேரன் கமல்பாண்டி ஆகிய இருவரது பெயரை குற்றப் பத்திரிகையில் இருந்து நீக்க வேண்டுமென, தற்போதைய பெண் காவல் ஆய்வாளர் அனிதாவிடம் நல்லதம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கு காவல் ஆய்வாளர், நல்லதம்பியிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். ஆனால், 80 ஆயிரம் ரூபாய் தருவதாக நல்லதம்பி கூறியதை ஆய்வாளர் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

முதல்கட்டமாக ரூ.30 ஆயிரம் பணத்தை அளிக்கத் திட்டமிட்ட நல்லதம்பி, லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழங்கிய அறிவுறுத்தலின்பேரில், ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பெண் காவல் ஆய்வாளர் அனிதாவிடம், நல்லதம்பி காவல் நிலையத்தில் வைத்து கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான ஏழு பேர் அடங்கிய குழுவினர், பணத்துடன் காவல் ஆய்வாளர் அனிதாவை கைது செய்தனர். தொடர்ந்து காவல் ஆய்வாளர் அனிதாவிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

Last Updated : Nov 27, 2020, 1:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details