மதுரை:தென் மாவட்டங்களில் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்கக் கூடிய மதுரை திருமலை நாயக்கர் மஹால் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதியானது மிகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் திரைப்படங்கள் எடுக்கப்படும் பொழுது நூற்றாண்டு பழமையான மஹாலின் சுவர்கள் மற்றும் தூண்கள் சேதம் அடைவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் நீதிமன்றம் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் திரைப்படங்கள் எடுப்பதற்குத் தடை விதித்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் குறும்படம் ஒன்று திருமலை நாயக்கர் மஹால் உட்பகுதியில் எந்த அனுமதியும் இன்றி எடுக்கப்பட்டதாகவும் மேலும் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் துப்பாக்கிகள் பயன்படுத்துவது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் துப்பாக்கி பயன்படுத்தி பொது வெளியில் எடுக்கப்பட்ட இந்த குறும்படத்திற்கு எப்படி தொல்லியல் துறை அனுமதி வழங்கியது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, திருமலை நாயக்கர் மஹாலில் எடுக்கப்பட்ட அந்த குறும்படத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருமலை நாயக்கர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு