மதுரை: சிறுபான்மை மாணவர்களுக்கு மெட்ரிக்குக்கு முன்பான கல்விக்கு உதவித் தொகை (Pre Matric Scholarship) இது நாள் வரை 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இனி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை திரும்பப்பெற வலியுறுத்தி ஒன்றிய சிறுபான்மைத் துறை அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் ராணிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. இன்று (டிச.1) கடிதம் எழுதியுள்ளார்.
அதில், 1 முதல் 8 ஆவது வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இனி வழங்கப்படாது என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அதற்கான காரணமாக, கல்வி உரிமைச் சட்டம் 2009 இன் படி நடுநிலைக் கல்வி வரை ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச, கட்டாய கல்வி வழங்கப்படுவது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆகவே கல்வி உதவித் தொகை இனி 9 மற்றும் 10 ஆவது வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டு மேற்கண்ட வகுப்புகளுக்கு தரப்பட்டு இருந்த விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக அறிய வருகிறேன். இது சிறுபான்மை சமூகங்களை சார்ந்த ஏழை, அடித்தள மக்களுக்கு பலத்த அடியாகும். இந்த திட்டம் மாணவர்கள் / பெற்றோர்கள் செலுத்துகிற கட்டணங்களை மட்டும் ஈடுகட்டக் கூடியது அல்ல. உங்கள் அமைச்சகத்தின் இணைய தளத்திலேயே இந்த திட்டம் பற்றி மிகத் தெளிவான முன்னுரை தரப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
இதோ அந்த வார்த்தைகள், "மெட்ரிக்குக்கு முந்தைய கல்வி உதவித் தொகை திட்டம் என்பது பள்ளிக் கூடத்திற்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதை ஊக்குவிப்பது ஆகும். அவர்களின் பள்ளிக் கல்விக்கான நிதிச் சுமையை குறைத்து, பள்ளிக் கல்வியை முடிக்க உதவுவது ஆகும். இது அவர்களுக்கு கல்வி கிடைப்பதை உறுதி செய்து போட்டி மிக்க வேலைச் சந்தையில் சமதள ஆடுகளத்தை உறுதி செய்வது ஆகும். கல்வி மூலம் அதிகாரப்படுத்தல் என்பது இத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று. சிறுபான்மை சமூகங்களின் சமூக பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் சக்தி கொண்டது".