மதுரை: திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி குறித்து நீண்ட விவாதம் நடைபெற்று வருகிறது. நிலம், தண்ணீர், மின்சாரம் ஆகியவை தேவையான அளவில் இருந்தால்கூட, தொழில் தொடங்க தயக்கம் காட்டப்பட்டு வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களை இணைத்து மண்டலமாக உருவாக்கப்பட்டது. மதுரை, தூத்துக்குடி பொருளாதாரச் சாலை உருவாக்கப்பட்டது.
அதேபோல் தொழில் தொடங்க மானியம், வட்டியில்லா கடன், அரசு நிலம் ஆகியவை வழங்கப்பட்டன. தொழில் நிறுவனங்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் இருந்தன. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களில் முதலீட்டை ஈர்க்க முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனிக் கவனம் செலுத்தினார்.
பின்தங்கிய தென்மாவட்டங்களை மேம்படுத்த திமுக நடவடிக்கை எடுக்குமா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி பின்னர் மதுரையில் சர்வதேச விமான நிலையம் அமைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார். மேலூர், கப்பலூர் வரை உள்ள 27 கிலோ மீட்டர் சுற்றுச் சாலையை விரிவுபடுத்தினார். அதேபோல் நத்தம் சாலையில் 1,000 கோடி முதலீட்டில் பறக்கும் பாலம் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சாலை துவரங்குறிச்சியில் இணையும். அதேபோல் மேலூர் காரைக்குடியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தென் மாவட்டத்தில் தொழில் தொடங்க பல்வேறு கட்டமைப்புகளை எடப்பாடி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது.
தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை போன்ற நகரங்களில் பெரும் தொழிற்சாலைகள் உருவாகி வருகிறது. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக அரசு கூறியதை தற்போது செயல்படுத்தப்படுமா?
அதேபோல் மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். ஏற்கனவே இரண்டு பூங்காக்கள் உள்ளன. அது இன்னமும் முழுமையாக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆகவே தென்மாவட்டங்களில் தொழில் முனைவோர்களுக்கு அதிமுக அரசுபோல் திமுக அரசு நடவடிக்கை எடுக்க முன் வருமா?
தொழில் பேட்டை தொடங்க நிலம் உள்ளது. அரசு அதனை முறையாக பயன்படுத்தி தொடங்க வேண்டும். தென்மாவட்டத்தில் தொழில் முதலீட்டை ஈர்க்க அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? குறிப்பாக சட்டம் ஒழுங்கை சீர்படுத்த அரசு முன் வருமா, தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்க சாலை வசதி, மேம்பால வசதி, கட்டமைப்பு வசதி, நில வசதி, மானியம், வட்டியில்லா கடன் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வழங்கியதுபோல தற்போது திமுக அரசு முன்மாதிரி எடுத்துக் கொண்டு விரைவுபடுத்துமா?
கடந்த ஒன்றரை ஆண்டு காலம் மதுரை ,தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஒரு சிறு தொழிற்சாலையோ, பெரும் தொழிற்சாலையோ உருவாக்கியதாக அடையாளம் தெரியவில்லை. ஆகவே பின் தங்கிய மாவட்டங்களுக்கு திமுக அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி